சிவில் பிரிவு
பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் பிரதிகளைப் பெற்றுக் கொள்வது எவ்வாறு?
1960 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு, திருமணம் மற்றும்
இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களிலும்
பெற்றுக்கொள்ள முடியும். தரவு அமைப்பில் தரவேற்றம் செய்யப்படாத சான்றிதழ்களை பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு
நிகழ்ந்த பிரதேச செயலகத்திலிருந்து சான்றுப்படுத்தப்பட்ட பிரதியொன்றைப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பப்
படிவங்களை எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
திருமணத்தை பதிவு செய்வது எவ்வாறு?
திருமண தரப்பினர் வசிக்கும் பிரிவின் திருமணப் பதிவாளரிடம் அல்லது பிரதேச செயலகத்திலுள்ள மேலதிக மாவட்டப்
பதிவாளரிடம் 14 நாட்களுக்கு முன்னர் திருமண அறிவித்தலை சமர்ப்பித்து திருமணத்தைப் பதிவுசெய்தல் தொடர்பான
மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இலங்கைக்கு வெளியே நிகழ்ந்த பிறப்பு அல்லது இறப்பினை பதிவு செய்வது எவ்வாறு?
இலங்கைக்கு வெளியில் நிகழ்ந்த பிறப்பு அல்லது இறப்பைப் பதிவு செய்வதற்கு, கொழும்பு 10, மாளிகாவத்தையில்
அமைந்துள்ள பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் மத்திய ஆவணக் காப்பகத்திற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
பிறப்பினை பதிவு செய்வதற்கு, பெற்றோரின் கடவுச் சீட்டு, வைத்தியசாலை அறிக்கை மற்றும் குறிப்பிட்ட நாட்டினால்
வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை அதனுடன் சமர்ப்பித்தல் வேண்டும். இறப்பைப் பதிவு செய்வதற்கு
இறந்தவர் பற்றிய தகவல்கள் மற்றும் இறப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படல்
வேண்டும்.
தத்தெடுக்கப்பட்ட குழந்தையொன்றின் பிறப்பை மீண்டும் பதிவு செய்வது எவ்வாறு?
தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் பிறப்பை மீள்பதிவு செய்வதற்காக, பத்தரமுல்லை, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை,
இலக்கம் 234/A3 இல் உள்ள பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை
சமர்ப்பிக்க முடியும். பிறப்பை மீள்பதிவு செய்வதற்கு, பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ்,
தத்தெடுப்புச் சான்றிதழ் மற்றும் குழந்தையின் பிறப்பு இதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருந்தால், குறித்த பிறப்புச்
சான்றிதழை சமர்ப்பித்தல் வேண்டும்.
தத்தெடுப்பு சான்றிதழின் பிரதியொன்றைப் பெற்றுக் கொள்வது எவ்வாறு?
தத்தெடுப்பு 2013.01.01 ம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருப்பின், கொழும்பு 10, மாளிகாவத்தையில் அமைந்துள்ள
பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் மத்திய ஆவணக் காப்பகத்திற்கும், தத்தெடுப்பு 2013.01.01 ம் திகதிக்குப் பின்னர் பதிவு
செய்யப்பட்டிருப்பின், பத்தரமுல்லை, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, இல. 234/A3 எனும் முகவரியில் அமைந்துள்ள
தலைமை அலுவலகத்திற்கும் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.
பிறப்பு, இறப்பு அல்லது திருமணச் சான்றிதழின் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக் கொள்வது எவ்வாறு?
பத்தரமுல்லை, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, இல. 234/A3, என்ற முகவரியில் அமைந்துள்ள பதிவாளர் நாயகம்
திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திலோ அல்லது இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள
மொழிபெயர்ப்பாளர்களிடமோ விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.
பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் விபரங்களை திருத்துதல் மற்றும் மாற்றம் செய்தல்.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்குறிய பிரதேச செயலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் வேண்டும். பிரதேச செயலகத்தின்
மேலதிக மாவட்டப் பதிவாளரை சந்தித்து மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும்.
இலங்கை குடியுரிமை அற்றவர்கள் அல்லது வெளிநாட்டவர்கள் இலங்கையில் தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொள்வதற்கு பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகள் என்ன?
திருமண அறிவித்தலை வழங்குவதற்கு 04 நாட்களுக்கு முன்னர் இலங்கையில்
வசித்திருத்தல் வேண்டும்.
வயதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கடவுச்சீட்டு அல்லது தேசிய அடையாள அட்டை அல்லது பிறப்புச்
சான்றிதழ்
குடியியல் நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்குத் தேவையான ஆவணங்கள் (விதவையாயின் வாழ்க்கைத்
துணையின் மரண சான்றிதழ்/ விவாகரத்துச் சான்றிதழ்/ திருமணம் முடிக்காமை தொடர்பான சான்றிதழ்)
திருமண அறிவித்தலை தற்காலிகமாக வசிக்கும் பகுதியிலுள்ள திருமண பதிவாளரிடம் வழங்குதல் வேண்டும்.
உரித்து பிரிவு
காணி தொடர்பான சட்டபூர்வமான ஆவணங்களை பதிவு செய்து கொள்வது எவ்வாறு?
காணி அமைந்துள்ள பிரதேசத்திற்குரிய காணிப் பதிவகத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கவும். அலுவலகங்கள் அமைந்துள்ள இடங்கள் இணையதளத்தில் காட்டப்பட்டுள்ளன.
காணியின் உரித்தினை பதிவு செய்து கொள்வது எவ்வாறு?
காணி அமைந்துள்ள பிரதேசத்திற்குரிய காணி/ உரித்து பதிவு செய்யும் அலுவலகத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கவும். அலுவலகங்கள் அமைந்துள்ள இடங்கள் இணையதளத்தில் காட்டப்பட்டுள்ளன.
கேவியட் தடையொன்றை பதிவு செய்வதற்கு கையளிக்கும் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் என்ன?
- கேவியட் தடை அறிவித்தலை 2 பிரதிகளில் முன்வைத்தல் வேண்டும்.
- காணி தொடர்பாக கேவியட்தாரருக்கு உள்ள தொடர்பு அல்லது உரிமையை நிரூபிக்கும் கேவியட்தாரரின் சத்தியக் கடதாசி.
- இது தொடர்பாக சட்டத்தரணி ஒருவரினால் வழங்கப்பட்ட சான்றிதழ்
- கேவியட்தாரர் காணியின் உரிமையாளராக இல்லாதவிடத்து, காணியின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்காக x படிவம் மற்றும் முத்திரையிடப்பட்ட கடித உறை.
- கேவியட்தாரர் அற்றோணி அதிகாரப் பத்திரத்தை வைத்திருப்பவராக இருந்தால், அற்றோணி அதிகாரப் பத்திரத்தின் அசல் பிரதியின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி.
அற்றோணி அதிகாரப் பத்திரத்தை பதிவு செய்து கொள்வது எவ்வாறு?
எழுதி அத்தாட்சிப்படுத்தப்பட்ட சகல உள்நாடு மற்றும் வெளிநாடு அற்றோணி அதிகாரப் பத்திரங்களையும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் எந்தவொரு வலய அலுவலகத்திலும் அல்லது மாவட்ட உதவிப் பதிவாளர் நாயகம் அலுவலகத்திலும் பதிவு செய்வதற்காக சமர்ப்பிக்கலாம்.
உறுதிப் பத்திரத்தின் பிரதியொன்றைப் பெற்றுக் கொள்வது எவ்வாறு?
உறுதிப் பத்திரத்தை எழுதி சான்றுப்படுத்திய நொத்தாரிசு மூலம் இரண்டாவது பிரதியை ஒப்படைத்த அலுவலகத்தில் சான்றிதழின் பிரதியொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தை A32(B) நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களுடன் சமர்ப்பிப்பதன் மூலம் உறுதிப் பத்திரத்தின் பிரதியொன்றைப் பெற்றுக் கொள்ளலாம்.
இருமடித்தாளின் பிரதியைப் பெற்றுக் கொள்வது எவ்வாறு?
காணி அமைந்துள்ள பிரதேசத்திற்குரிய காணி பதிவு செய்யும் அலுவலகத்தில் பிரித்தெடுப்பின் பிரதியொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான A32(A) விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களுடன் காணி அமைந்துள்ள பிரதேசத்தின் காணிப் பதிவு அலுவலகத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
நொத்தாரிசு பிரிவு
உரித்துச் சான்றிதழைப் பயன்படுத்தும் போது கருத்திற்கொள்ள வேண்டிய விடயங்கள் என்ன?
- சான்றிதழை லேமினேட் செய்வதைத் தவிர்க்கவும்.
- மடிப்பதையும், கசக்குவதையும் தவிர்க்கவும்
- உரித்துச் சான்றிதழில் எதையும் மாற்றம் செய்யவோ அதில் எதையும் எழுதவோ வேண்டாம்.
- இதை தவறான நபர்களின் கைகளில் கிடைப்பதைத் தவிர்க்கவும்.
- பூச்சிகளால் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும்.
**ஏதேனும் காரணத்தினால் மேலே குறிப்பிட்டுள்ள முறையில் உங்கள் உரித்துச் சான்றிதழ் காணாமல் போனாலோ அல்லது அழிவடைந்தாலோ, உரிய கட்டணத்திற்கு உட்பட்டு புதிய உரித்துச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலையேற்படும். இதற்காக, நீங்கள் காணி அமைந்துள்ள பிரதேசத்தின் உரித்துப் பதிவாளரிடம் செல்ல வேண்டும்.
கடத்திரள் வரைபடத்தின் பிரதியொன்றைப் பெற்றுக் கொள்வது எவ்வாறு?
நில அளவைத் திணைக்களத்திடம் உரித்துச் சான்றிதழின் விபரங்களை முன்வைப்பதன் மூலம் கடத்திரள் வரைபடத்தின் பிரதியொன்றைக் கோரலாம்.
உரித்துச் சான்றிதழுக்குரிய இருமடித் தாள்களின் பிரதிகளைப் பெற்றுக் கொள்வது எவ்வாறு?
உரித்துச் சான்றிதழ் வழங்கப்பட்ட உரித்துப் பதிவு அலுவலகத்தில் உரிமைச் சான்றிதழுக்கான விபரங்களுடன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்து இருமடித் தாள்களின் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
உரித்துச் சான்றிதழை வழங்கியதன் பின்னர், காணிக்குரிய பிந்தைய பரிவர்த்தணைகள் இடம்பெறுவது எவ்வாறு?
இந்த சான்றிதழைப் பெற்றதன் பின்னர் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிவர்த்தனைகளும் உரித்துச் சான்றிதழின் மூலமாக மாத்திரமே மேற்கொள்ளப்படுதல் வேண்டும். அனைத்து பிந்தைய பரிவர்த்தனைகளும்.2308/27 ம் இலக்க 2022.12.01ம் திகதிய அதிவிஷேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள சாதனப் பத்திரம் மூலம் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
உரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்ட காணியில் உப பிரிவாக்கம் அல்லது ஒருங்கிணைப்பு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?
காணியின் உரிமையாளர், பிம்சவிய நில அளவை செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட நில அளவையாளரிடம் உரித்துச் சான்றிதழைச் சமர்ப்பித்து, காணிக்கான உப பிரிவு நில வரைபடத்தை அல்லது ஒருங்கிணைக்கும் நில வரைபடத்தை தயாரித்துக் கொள்ளல் வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட நில வரைபடத்தின் வன் பிரதி மற்றும் உரித்துச் சான்றிதழை பிரசித்த நொத்தாரிசு ஒருவரிடம் எடுத்துச் சென்று உப பிரிவாக்க சாதனப் பத்திரத்தை தயாரித்து குறித்த சாதனப் பத்திரம், உரித்துச் சான்றிதழ் மற்றும் நில வரைபடத்தின் மென் பிரதி ஆகியவற்றுடன் உரிய உரித்துப் பதிவு அலுவலகத்தில் உரிய கட்டணத்தைச் செலுத்தி ஒப்படைக்கவும்.. (1998 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க உரித்துப் பதிவுச் சட்டத்தின் பிரிவு 36)
முக்கிய குறிப்பு ;
உரித்துச் சான்றிதழுடன் தொடர்புடைய விற்பனை ஒப்பந்தங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால், உப பிரிவாக்கத்தை பதிவு செய்வதற்கு முன்னர் குறித்த ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படுதல் வேண்டும். (இல. 2308 மற்றும் 2022.12.01 திகதிய ஒழுங்குமுறை திருத்தங்களின்படி)
மேலும், ஒரு வீதியை அல்லது அணுகல் பாதையைத் தவிர பிரித்து வேறாக்கப்பட்ட அல்லது இணைக்கப்பட்ட காணித் துண்டுகளுக்கான கூட்டு உரிமையை வைத்திருக்க முடியாது.
உரித்துச் சான்றிதழ் வழங்கப்பட்ட காணியின் உரிமையாளர் இறந்து விட்டால், அவரின் வாரிசுகள் உரிமையை பெற்றுக் கொள்வது எவ்வாறு?
கடைசி விருப்பாவணத்தை தயாரிக்காது இறந்தவரின் சொத்து தொடர்பாக, குறித்த காணி அமைந்துள்ள உரித்து நிர்ணய ஆணையாளர் அலுவலகத்திற்குச் சென்று வாரிசுகளினால் தங்களது உரிமைகளை நிரூபித்ததன் பின்னர் புதிய உரித்தினை வர்த்தமானிப் பத்திரிகையில் வெளியிடுவதன் மூலம் புதிய உரிமையாளர்கள் பெயரிடப்படுவர். குறித்த வர்த்தமானிப் பத்திரிகை தொடர்பாக உரித்து நிர்ணய ஆணையாளரினால் உரித்து பதிவு அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படும் அட்டவணைகளின் அடிப்படையில் புதிய வாரிசுகளுக்கு உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. (1998 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க உரித்து பதிவுச் சட்டத்தின் பிரிவு 55)
வழங்கப்பட்ட உரித்துச் சான்றிதழில் உரிமையாளரின் பெயர், தேசிய அடையாள இலக்கம், முகவரி மாற்றம் (அச்சுப் பிழைகள்) இருந்தால் அவற்றை சீர்செய்வது எவ்வாறு?
உரித்து பதிவுச் சட்டத்தின் 58(1) ஏற்பாடுகளின் பிரகாரம், குறித்த காணி அமைந்துள்ள உரித்து பதிவாளரிடம் முன்வைக்கப்படும் கோரிக்கையின் பேரில் (மாற்றம் தொடர்பான எழுத்துப்பூர்வ ஆதாரங்களைச் சமர்ப்பித்து) திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு ; இங்கு தவறு விடப்பட்டிருப்பது உரித்து பதிவினை வர்த்தமானயில் பிரசுரிக்கும் போது எனின், முதலில் உரிய உரித்து நிர்ணய பிரதேச அலுவலகத்திற்கு அறிவிக்கப்படல் வேண்டும்.
இரண்டாம் வகுப்பு உரித்துச் சான்றிதழை முதலாம் வகுப்பாக மாற்றிக் கொள்வது எவ்வாறு?
உரித்துப் பதிவுச் சட்டத்தின் 31-வது ஏற்பாடுகளின் பிரகாரம், காணியின் உரிமையாளரினால் உரித்துச் சான்றிதழைப் பதிவுசெய்து 10 ஆண்டுகள் கடந்த பின்னர், உரிய உரித்து நிர்ணய ஆணையாளர் அலுவலகத்தில் கோரிக்கையை முன்வைத்தல் வேண்டும். அதன் பின்னர் உரித்து நிர்ணய ஆணையாளரினால் தயாரிக்கப்பட்ட அட்டவணையை உரித்து பதிவு அலுவலகத்திற்கு முன்வைத்ததன் பின்னர் உரித்து பதிவாளர் நாயகத்தின் அனுமதியின் பிரகாரம் குறித்த உரித்துச் சான்றிதழ் முதலாம் வகுப்பு சான்றிதழாக மாற்றமடையும்.
உரித்துச் சான்றிதழ் தொலைந்து போய் விடின் புதிய உரித்துச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வது எவ்வாறு?
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை முன்வைத்து அதன் அசல் பிரதி, கோரிக்கைக் கடிதம் மற்றும் சத்தியக் கடதாசி என்பவற்றுடன் உரிய உரித்து பதிவாளர் அலுவலகத்தில் உரிய கட்டணத்தைச் செலுத்தி சமர்ப்பிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் (LDO) கீழ் உரித்துச் சான்றிதழ் தொடர்பாக நீங்கள் மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் என்ன?
உங்கள் ஆயுட்கால உடைமை அல்லது மரபுரிமைக்காரர்கள் இதன் கீழ் பதிவு செய்யலாம்.
அரசாங்க அளிப்புப் பத்திரத்தின் கீழ் உங்களுக்கு வழங்கப்பட்ட காணியெனின், அது காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்கும். அவ்வாறான காணியின் பிந்தைய பரிவர்த்தனைகள் அரசாங்க காணி கட்டளைச் சட்டத்தில் காட்டப்பட்டுள்ள படிவங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும். ’