விவாகரத்தைப் பெற்றுக் கொள்ளல்
பொதுவான திருமண சட்டத்தின் கீழ் திருமணமொன்றை விவாகரத்து செய்தல்
இந்த விடயம் முற்றிலும் நீதிமன்ற நடவடிக்கையாகும். சட்டத்தரணி ஒருவரை அணுகி தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது பொருத்தமானது.
கண்டிய திருமணமொன்றை விவாகரத்து செய்தல்
விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டியது,
- விண்ணப்பதாரர் கண்டிய பகுதியில் வசிப்பவராக இருந்தால், வசிப்பிடத்திற்குரிய பிரதேச செயலகத்தின் மாவட்டப் பதிவாளரிடம்,
- விண்ணப்பதாரர் கண்டிய பகுயியில் வசிக்காத பட்சத்தில், பிரதிவாதி கண்டிய பகுயியில் வசிப்பவராக இருந்தால், குறித்த பிரிவின் பிரதேச செயலகத்தின் மாவட்டப் பதிவாளரிடம் அல்லது திருமணம் பதிவு செய்யப்பட்ட பிரிவின் பிரதேச செயலக பிரிவின் மாவட்டப் பதிவாளரிடம்,
- இரு தரப்பினரும் கண்டிய பகுதிக்கு வெளியே வசிப்பவராக இருந்தால், திருமணம் பதிவு செய்யப்பட்ட பிரிவிற்குரிய பிரதேச செயலகத்தின் மாவட்டப் பதிவாளரிடம்.
விவாகரத்திற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப்படிவத்தை மாவட்டப் பதிவாளரிடம் பெற்றுக் கொள்ளலாம்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
- கண்டிய திருமணச் சான்றிதழ்
- முறைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்கள்
மாவட்ட பதிவாளரினால் இரு தரப்பினரும் விசாரணைக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உறுதி செய்யப்பட்டால், மாவட்டப் பதிவாளர் விவாகரத்துக்கான கட்டளையை வெளியிடுவார். இல்லையெனில், விவாகரத்து நிராகரிக்கப்படும்.
- மாவட்டப் பதிவாளரினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளாவிடின், அதிருப்தியடைந்த தரப்பினர் 30 நாட்களுக்குள் மாவட்டப் பதிவாளரிடம் மேன்முறையீடு செய்யலாம்.
மாவட்ட பதிவாளரினால் குறித்த மேன்முறையீடு மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதோடு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
முஸ்லிம் திருமணமொன்றை விவாகரத்து செய்தல்
முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் கீழ் இடம்பெற்ற திருமணமொன்றை விவாகரத்து செய்வதற்கு, கணவன் அல்லது மனைவி தங்கள் அதிகார வரம்பிற்காக நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்ட காதியிடம் கோரிக்கையை சமர்ப்பித்தல் வேண்டும். (1951ம் ஆண்டின் 13ம் இலக்க முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டம் 115 ம் அதிகாரத்தைப் பார்வையிடவும்)
விவாகரத்து சான்றிதழைப் பெற்றுக் கொள்ளல்
கண்டிய திருமண விவாகரத்துச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளல்
மாவட்டப் பதிவாளரால் வழங்கப்பட்ட விவாகரத்து தீர்ப்பு தொடர்பாக மேன்முறையீடு செய்யப்படவில்லை என்றால் (தீர்ப்பு வழங்கப்பட்டு 30 நாட்களுக்குள்), மேன்முறையீட்டு காலத்தின் முடிவில் விவாகரத்து சான்றிதழை பெண் தரப்பினருக்கு வழங்கப்படும்.
விவாகரத்து தொடர்பான மாவட்டப் பதிவாளரின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யும் பட்சத்தில், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விவாகரத்துச் சான்றிதழ் சம்பந்தப்பட்ட மாவட்டப் பதிவாளரால் வழங்கப்படும்.
முஸ்லிம் திருமண விவாகரத்துச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளல்
திருமணத்தை விவாகரத்து செய்யும் போது, சம்பந்தப்பட்ட பெண் தரப்பினருக்கு காதியினால் இலவசமாக பிரதியொன்று வழங்கப்படும் என்பதோடு, மேலதிக பிரதிகள் தேவைப்பட்டால், காதியின் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேச செயலகத்திற்கு விண்ணப்பப் படிவத்தை முன்வைத்து சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.