அற்றோணி அதிகாரப் பத்திரமொன்றை இரத்துச் செய்வதற்கு, அதிகாரத்தை வழங்குபவர் அல்லது அற்றோணி அதிகாரத்தைப் பெற்றவர் எண்ணும் போது, அந்த நோக்கத்தை மற்றைய தரப்பினருக்கு தெரிவித்தல் வேண்டும். இரத்துச் செய்வதற்கு எண்ணும் தரப்பினரின் கருத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரசித்த நொத்தாரிசு ஒருவரினால் எழுதி சான்றுப்படுத்தப்பட்ட ஆவணமொன்றை, அற்றோணி அதிகாரப் பத்திரம் பதிவுசெய்யப்பட்டுள்ள அலுவலகத்தில் சமர்ப்பித்தல் வேண்டும். (2022 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க அற்றோணி அதிகாரப்பத்திர திருத்தச் சட்டத்தின் பிரகாரம்)
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
- பிரசித்த நொத்தாரிசு ஒருவரினால் எழுதி சான்றுப்படுத்தப்பட்ட இரத்துச் செய்யும் ஆவணத்தின் அசல் பிரதி
- அற்றோணி வழங்குபவரின் மற்றும் பெறுபவரின் முழுப் பெயர், முகவரி மற்றும் தேசிய அடையாள அட்டையின் அல்லது கடவுச்சீட்டின், சாரதி அனுமதிப் பத்திரத்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- பிரசித்த நொத்தரிசு ஒருவரினால் உண்மையான பிரதி என சான்றுப்படுத்தப்பட்ட இரத்துச் செய்யும் ஆவணத்தின் பிரதி (அசல் பிரதியுடன் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.)
- பதிவு செய்யப்பட்ட அற்றோணி அதிகாரப் பத்திரத்தின் அசல் பிரதி அல்லது பதிவு செய்யப்பட்ட அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
அற்றோணி அதிகாரப் பத்திரத்தை வழங்குபவர் தனது அற்றோணி அதிகாரத்தை உடனடியாக செயற்படும் வண்ணம் இரத்து செய்ய விரும்பினால், இரத்து செய்வதற்கான ஆவணத்தை முன்வைக்கும் வரை அற்றோணி அதிகாரப் பத்திரத்தை தான் இரத்து செய்வதற்கு உத்தேசித்துள்ளதென்ற அறிவித்தலை பதிவாளர் நாயகத்திற்கு பதிவுக்காக முன்வைக்கலாம்.