எவரேனும் ஒருவர் சார்பாக அவரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு, ஒரு செயலைச் செய்வதற்கு, ஒரு பணியைச் செய்வதற்கு அல்லது ஒரு வர்த்தகத்தை அல்லது வியாபாரத்தை மேற்கொள்வதற்கு, அவ்வாறான நபரொருவரினால் இன்னுமொரு நபருக்கு அதிகாரம் வழங்குவதற்கான அற்றோணி அதிகாரப் பத்திரத்தை பதிவு செய்து கொள்ளலாம்.. இலங்கையினுள்ளேயோ அல்லது வேறு எந்த நாட்டிலோ கையொப்பமிடப்பட்ட சகல அற்றோணி அதிகாரப் பத்திரங்களும் இந்தத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படல் வேண்டும்.
இலங்கையில் எழுதி கையொப்பமிடப்பட்டிருந்தால், கையொப்பமிட்ட நாளிலிருந்து ஒரு மாத காலத்திற்குள்ளும், இலங்கைக்கு வெளியில் எழுதி கையொப்பமிடப்பட்டிருந்தால், கையொப்பமிட்ட நாளிலிருந்து 03 மாத காலத்திற்குள்ளும் பதிவு செய்வதற்காக இந்தத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
1902 ஆம் ஆண்டின் 04 ம் இலக்க அற்றோணி அதிகாரப் பத்திர கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக எழுதி சான்றுப்படுத்தப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அற்றோணி அதிகாரப் பத்திரங்களையும், அற்றோணி அதிகாரம் பெற்றவர்கள் வசிக்கும் முகவரியைக் கருத்திற் கொள்ளாது எந்தவொரு வலய அலுவலகத்திலோ அல்லது மாவட்ட உதவிப் பதிவாளர் நாயகம் அலுவலகத்திலோ பதிவு செய்வதற்காக சமர்ப்பிக்கலாம்.
2022 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க அற்றோணி அதிகாரப் பத்திர திருத்தப்பட்ட கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக, இலங்கையினுள் எழுதி கையொப்பமிடும்போது, அது இரண்டு சாட்சிகள் முன்னிலையில் பிரசித்த நொத்தாரிசு ஒருவரினால் எழுதப்பட்டு சான்றுப்படுத்தப்படல் வேண்டும்.
இலங்கைக்கு வெளியில் எழுதி கையொப்பமிடும்போது, இரண்டு சாட்சிகள் முன்னிலையிலும், தூதுவர் அல்லது உயர்ஸ்தானிகர் அல்லது இராஜதந்திர அதிகாரி அல்லது தூதரக அதிகாரி அல்லது குறித்த நாட்டின் சட்டத்தின்படி அற்றோணி அதிகாரப் பத்திரத்தை எழுதி சான்றுப்படுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் ஒரு நபரின் முன்னிலையிலும் எழுதி கையொப்பமிடல் வேண்டும்.
பதிவு செய்வதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
- அற்றோணி அதிகாரப் பத்திரத்தின் அசல் பிரதி
- பிரசித்த நொத்தாரிசு ஒருவரினால் உண்மையான பிரதி என சான்றுப்படுத்தப்பட்ட அற்றோணி அதிகாரப் பத்திரத்தின் பிரதி.
- 2022 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க அற்றோணி அதிகாரப் பத்திர (திருத்திய) சட்டத்தின், அட்டவணையில் காட்டப்பட்டுள்ளவாறான உறுதிமொழி
- அற்றோணி அதிகாரப் பத்திரத்தை வழங்குநரின் மற்றும் பெறுபவரின் தேசிய அடையாள அட்டை, கடவுச் சீட்டு அல்லது சாரதி அனுமதிப் பத்திரத்தின் நொத்தாரிசு ஒருவரினால் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- வெளிநாட்டில் எழுதப்பட்டு சான்றுப்படுத்தப்பட்ட அற்றோணி அதிகாரப் பத்திரம் எனின், வழங்குநரினால் சுயமாக சான்றுப்படுத்தப்பட்ட (கையொப்பமிடப்பட்ட) அவரின் கடவுச்சீட்டின் உயிரியல் தகவல் பக்கத்தின் பிரதியொன்று